பிரபாகரன் - வாழ்வும், மரணமும்.


பிரபாகரன் - வாழ்வும், மரணமும்.
பா. ராகவன். 
கிழக்கு பதிப்பகம். 2009

அதிகம் வெளிவராத சில சம்பவங்கள் மூலம் பிரபாகரன் என்னும் தனி மனிதரை, அவரது குணாதிசயங்களை, சிந்தனையை, செயல்பாடுகளை மிகையின்றி புரிந்து கொள்ள ஒரு முயற்சி.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு போராளி இயக்கத்தின் தலைவராக இருந்து படைகளையும் மக்களையும் வழிநடத்திக் கொண்டிருந்த ஒரு மனிதரைப் பற்றி முழுமையானதொரு பதிவை இன்னொருவர் ஒருக்காலும் எழுத இயலாது. எனினும் அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும் அவரைப் பற்றிய தகவல்களை சேர்த்துக் கட்டி அவரைப் புரிந்து கொள்ளுமளவுக்கு ஓர் உருவத்தை சமைக்க முடியுமா என்று பார்க்கிற முயற்சி.

பிரபாகரனைப் பற்றி பலருக்கும் பல விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. நேரடித் தகவல்களாகவோ, கேள்விப்பட்டவைகளாகவோ, வெறும் வதந்திகளாகவோ அந்த விஷயங்களை அவர்கள் தமக்குள் வைத்துள்ளனர். ஆனால் வெளிப்படையாக பேசவோ, தமது அடையாளத்தை வெளிப்படுத்தவோ அவர்கள் மறுத்துவிடுகின்றனர். இதனாலேயே ஆதாரம் குறிப்பிட்டு எழுத இயலாதபடியால் பல தகவல்கள் இன்னும் எழுதப் படாமலே இருக்கின்றன.

* ஐந்து வயது பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உக்கார மாட்டார்கள். அந்த பையன் முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். அவனது ஆர்வங்கள் இன்னதென்று பெற்றோருக்கு சரியாக தெரியவில்லை. ஏன் அடிக்கடி தனியே உக்கார்ந்து யோசிக்கிறாய்? என்ன ஓடுகிறது உன் புத்தியில்? இந்த வயதில் என்ன சிந்தனை? பெரியவர்கள் பேசுமிடத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை. என்ன மாதிரியான ஆர்வம் இது? அக்கறை இது? ஏதேனும் புரியுமா உனக்கு?

ஒரு நாள் அவனது அப்பாவும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். கலவரத்தில் கொளுத்தப் பட்ட பாணந்துரை குருக்கள் பற்றி. ஊரே பற்றி எரிகிறது. விதி, வேறென்ன சொல்வது? சிறுவன் முதல் முறையாக வாய் திறந்தான், 'அப்பா, தாக்கத் தான் வருகிறார்கள் என்று தெரியுமல்லவா? அவர் ஏன் திருப்பி தாக்கவில்லை?'

* நான் காந்தியை மதிக்கிறேன். ஆனால் இந்தியாவின் கதை வேறு. நமக்கிருக்கும் பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்ததில்லை. பிரிட்டிஷாருக்கு அங்கே அதிகாரம் செலுத்துவதொன்றே குறி, இனப்படுகொலை அல்ல. அங்கே ஒரே ஒரு ஜாலியன் வாலா பாக். இங்கே ஊருக்கு ஊர் சொக்கப்பனை. அங்கே எந்த பாணந்துறை குருக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்? எப்படி ஒப்பிடுவீர்கள்?

எந்தவித அச்சுறுத்தலுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்கு பிடித்திருந்தது. என் மண்ணில் என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படி தடை போடலாம்?

* உயரம் சற்று மட்டு தான். ஆனால் உறுதியான தேகம், எதையும் தாங்கும் என்பது போல. கையப் பிடித்து குலுக்கும் போது லேசாக வலித்த மாதிரி இல்லை? பலசாலி போலும் ஆனால் முகத்தில் ஒரு வசீகரப் புன்னகை. கண்ணில் தீப்பொறி மாதிரி ஏதோ ஒன்று.

அவரிடம் ஒரு வழக்கம் உண்டு. எந்த கூட்டத்திலும் சகஜமாக இருக்க அவரால் முடியும். எந்த கூட்டத்தின் சட்டை சாயமும் தன மீது ஒட்டாமல் பார்த்துக்கொள்வார். ஆல்பர்ட் துரையப்பாவை அவர் சுட்டுக் கொன்ற போது வயது 21. அவரது நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட அதே வயது தான். அவர்களுக்கெல்லாம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. செய்து முடிக்கும் வல்லமை பிரபாகரனுக்கே இருந்தது.

* வாருங்கள் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வோம் என்றால், ஓடிச் சென்று ஒரு பூந்தொட்டியை எடுத்து வந்து அருகே வைத்து, 'ம்ம் எடு' என்னும் குழந்தைத்தனம் கடைசி வரை மாறவேயில்லை. தன்னால் ஒழுங்காக இங்கிலீஷ் பேச முடியவில்லையே என்ற வருத்தம் கடைசி வரை ஓயவில்லை.

* ஒரு முறை யார் உங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று ஒரு நிருபர் பிரபாகரனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் "இயற்கை என் தோழன். வாழ்கை என் தத்துவ ஆசிரியர். வரலாறு என் வழிகாட்டி"

* இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு பிரபாகரன் அளித்த போர் பயிற்சிகளுக்கு கூட முன் மாதிரிகள் கிடையாது. இது நம் மண். நமது பிரச்சனை. நமது எதிரிக்கு எது சரி என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். இன்னொரு இடத்தில் கையாளப்படும் போர் கலை உத்திகள் இங்கே எடுபடும் என்று சொல்வதற்கில்லை. வேண்டாம், யாரையும் பார்க்காதீர்கள். நமக்கு முன் மாதிரிகளைத் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். நமக்கு நாம் தான் ஆசிரியர்கள். நமக்கேற்ற போர் பயிற்சிகளை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

* ஜூலை 15 1983, மீசாலை கிராமம். 2 ஜீப்புகள். ஒரு மினி பஸ், ஒரு பெரிய ராணுவ ட்ரக். நிறைய வீரர்கள் மத்தியில் நான்கு புலிகள். பதுங்க வழியில்லாத வெட்ட வெளி பிரதேசம். வீரம் செறிந்த சண்டை. இரண்டு பேர் தப்பித்தனர், இரண்டு பேர் உயிரிழந்தனர். அனால் சிங்கள வீரர்களால் கொல்லப்படவில்லை. குண்டடி பட்டிருந்ததால் ஓட முடியாதென தெரிந்து மாட்டிக்கொள்ள கூடாதென்று சகப் போராளியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். சுட்டவர் முகங்களில் கண்ணீர். சுடப்பட்டவர் முகங்களில் புன்னகை.

* துடித்து எழுந்தார் பிரபாகரன். விட்டு விடுவதற்கில்லை. அவர்கள் உயிர் இயற்கையில் கரைவதற்குள்ளாக பதிலளிக்க வேண்டும். ஒன்பது பேரை பிரபாகரன் குறி வைத்தார். சரியாக ஒன்பது குண்டுகள். போராளி குண்டுகளை வீணாக்க கூடாது. ஒரு துப்பாக்கி ரவியின் விலை 25 ரூபாய். பிரபாகரன் அடிக்கடி கூறும் விஷயம்.

* ராஜீவ் காந்தி முன் வைத்த அமைதி ஒப்பந்தம் மேலுக்கு அற்புதமாகவும், துருவிப்பார்த்தல் நடைமுறை சாத்தியங்களை கருத்தில் கொள்ளாதவாறும் இருப்பதாக பிரபாகரனுக்கு தோன்றியது. இந்தியாவிற்கு இலங்கை தமிழர்கள் பிரச்னையை விட தன் பிராந்திய நலனே முக்கியம். 

ஐயா, இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்பதற்கில்லை. ஏற்றால் எமது மக்களுக்கு நாங்கள் செய்யும் துரோகமாகும். நாம் புவியியல் ரீதியில் வெகுவாக பிரிந்து கிடக்கிறோம். குறைந்த பட்சம் மனத்தால் நெருங்கப் பாருங்கள். உங்கள் அரசியல் லாபங்களுக்கு அப்பால் மக்கள் படும் துன்பங்களை கொஞ்சம் கருத்தில் வையுங்கள் .

* மற்ற போராளி இயக்க தலைவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசமே அது தான். இந்தியாவை அவர்கள் ஒரு பெரும் சக்தியாக, உதவும் சக்தியாக, ஆக்கவும் அழிக்கவும் முடிந்த சக்தியாக பார்த்த சமையத்தில் பிரபாகரன் மட்டும் தொடக்கத்திலிருந்தே சந்தேகப் பார்வை பார்த்தார். அவரது சந்தேகங்கள் வெற்றி கண்டதுதான் சரித்திரத்தின் துயரப் பக்கங்களை எழுதின.

* ஒரு காலத்தில் இலங்கை தீவின் மூன்றிலொரு பங்கு நிலப்பரப்பையும் மூன்றில் இரு பங்கு கடற்கரை பரப்பையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆண்டு கொண்டிருந்த பிரபாகரனையும், அவரது இயக்கத்தவர்களையும் வன்னிப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் பரப்புக்குள் சுருக்கிவிட்டோம், மொத்தமாக பிடித்துவிட்டோம் என்று இலங்கை ராணுவம் அறுதியிட்டு சொல்லுமளவு நிலைமை மாறிப்போனதன் தொடக்கக்கண்ணி ராஜீவ் படுகொலையில் தான் இருக்கிறது. சரித்திடம் இப்படித்தான் சில சமையம் சரிவிற்கும் அபார விலை சொல்லிவிடும்.

* 'பிரபாகரன் இந்திய ராணுவத்திடம் மண்டியிடுவது ஒன்று தான் போர் நிறுத்தத்திற்கு ஒரே வழி என்று ராஜீவ் தீர்மானமாக நினைக்கிறார்' என்று முரசொலி மாறன் தம்மிடம் தெரிவித்ததாக பாலசிங்கம் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.

* பிரபாகரன் இறுதி வரை யுத்தம் நடந்து கொண்டிருந்த இடத்தில மட்டுமே இருந்திருக்கிறார். நேரடியாக யுத்தத்தில் பங்கு கொண்டு படையை வழிநடத்தி இருக்கிறார். இறுதி கணம் வரை போராடித்தான் இறந்திருக்கிறார்.

* பிரபாகரன் இப்போது இல்லை. இனி எப்போதும் இல்லை. இது ஒன்று தான் இப்போதைய, எப்போதைக்குமான உண்மை. 1976ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நீடித்த அவரது விடுதலை போராட்டம் மிகப் பெரிய தோல்வியுடன் ஒரு முடிவை எட்டியிருக்கிறது என்னும் பயங்கர உண்மையை விழுங்கித்தான் தீர வேண்டும்.

* பிரபாகரனின் மரணம் அவரது வாழ்வை காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது.

முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண் போல் நின்ற மாமனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை.

* ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை 'மாவீரர் மரணம்' என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அனாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்து கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது.

* பிரபாகரனின் நியாயங்கள் முற்றிலும் சரியானதாக இல்லாது போயிருந்தால், அரசாங்கங்கள் வேண்டாம் மக்களே நிராகரித்திருப்பார்கள். அவை அர்த்தமுள்ள கோரிக்கைகளாக இருப்பதால் தான் இன்று வரையிலும் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பெரும்பான்மையினர் அவரை ஆதரிக்கின்றனர்.

இனி செய்யக் கூடியவை என்ன?

இந்தியா உதவும் என்று இனி ஒருபோதுமெண்ணிக் கொண்டிராமல் சர்வதேச சமூகத்தின் முன் தமது கோரிக்கைகளின் நியாயத்தை அமைதியான முறையில் எடுத்து செல்லலாம்.

இலங்கை அகதிகளை பெருமளவு ஆதரித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலிய அரசுகளை தமிழர்கள் தமக்கான குறைந்தபட்ச நியாயங்களுக்காக பேச வைக்க முயற்சி மேற்கொள்ளலாம்.

தங்களுக்கான சரியான அரசியல் பிரதிநிதிகளை தேடித் பிடித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இலங்கைப் பிரச்சனையை புரியவைக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும். இலங்கை பிரச்சனையில் இதுநாள் வரை அமெரிக்க தலையிடாததன் ஒரே காரணம் அதற்கு அங்கே லாபம் ஒன்றும் இல்லை என்பதே. அனால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்திலிருந்து வந்து அதிபராகியிருக்கும் ஒபாமாவுக்கு ஈழத் தமிழர்களின் பிரச்சனை புரியாமலிருக்க வாய்ப்பில்லை. அவர் மனிதாபிமான அடிப்படையில் ஏதேனும் செய்யலாம்.

இல்லையெனில் ஒர் ஐந்தாடு காலத்திற்குள் தமிழர் பகுதி என்று எதுவுமில்லாமல், எங்கும் சிங்களர்கள் பரவி படர்ந்து விட்ட பிறகு அடையாள ஒழிப்பு முழுமை பெற்று விடுவதை தவிர்க்க முடியாது.

Comments