நவராத்திரி

நவராத்திரி என்றாலே பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது கொலு, சிலருக்கு இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை, மாணவர்களுக்கோ ஆயுத பூஜையன்று படிக்க தேவையில்லை என்ற மகிழ்ச்சி. வெகு சிலருக்கே மஹிஷாசுரனும் அவனை வதம் செய்யும் தேவியும் நினைவில் வருவர்.
இன்றைய தலைமுறையில் பெரும்பாலானோர் விஜயதசமியன்று  நெல்லில் முதன் முதலில் ‘அ’ எழுதி பள்ளிக்கு அனுப்பப்பட்டிருப்பர். இன்றளவும் பாலர் வகுப்புகளுக்கு அன்றைய தினம் சேர்க்கை நடைபெறுவதை காண்கிறோம். ஒன்பது நாள் பூஜை செய்து, பத்தாவது நாள் கொண்டாடி மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டது. பூஜை விடுமுறை நாட்கள் என்பது கூட, விடுமுறை நாள் என்றளவு சுருங்கிவிட்ட இந்த விழாவை பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அதற்கான நேரமும் நம்மிடம் இல்லை. இன்றைய நிலையில் எந்திரன் திரைப்படத்தில் காட்டுவது போல் கணினிக்கு பொட்டு வைத்து பூஜை செய்வதே நம் கொண்டாட்டமாகிவிட்டது.
எப்போதும் அவசர கதியில் சுழன்று கொண்டிருக்கும் நாம் நின்று நிதானமாய் ஒரு நிமிடம் யோசிக்க வேண்டியது, ‘இப்படி நில்லாமல் இயங்கும் இயக்கத்திற்கு சக்தி எங்கிருந்து பிறக்கிறது?’ என்பதை. உடலானது பஞ்ச பூதங்களின் கலவை. அதை இயக்கும் உயிரே சக்தி. உயிரின் வழியே உடல் செல்ல வேண்டும். மனிதன் உயிர் சொல்படி நடப்பதற்கும் உடல் சொல்படி நடப்பதற்கும் மிகுந்த வேறுபாடுள்ளது. நம் உயிரை சக்தியின் பிறப்பிடமாய்க் கொண்டால், உயிரானது பிறக்குமிடம்? இந்த கேள்விக்கு பல அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். வாத பிரதிவாதம் முடிவதே இல்லை. நமக்கு அது தேவையில்லை. நாம்  புரிந்துகொள்ள வேண்டியது சக்தியின்றி மனிதன் இயங்க முடியாது. அவ்வளவே. அந்த சக்தியின் உருவாய் திகழும் மூன்று தேவியரை போற்றவும் அவர்களின் வெற்றியை களிக்கவுமே நவராத்திரியை கொண்டாடுகிறோம்.
நவராத்திரியின் புராணம் பலருக்கு தெரிந்திருந்த போதிலும் செய்வன திருந்த செய்ய அதை கூறுவதில் தவறில்லை.
முன்பொரு காலத்தில் தவ வலிமை பெற்ற முனிவரொருவர் தான் என்ற கர்வம் கொண்டு, பணிவென்பதையே மறந்து, யாரையும் மதிக்காது இருந்தார். அவ்வழியே அகத்திய மாமுனி செல்ல அவர் முகமன் கூறாது கண்டும் காணாதது போலிருந்தார். அகத்திய முனிவர் தானாய் பேசிய போதும் மரியாதை சிறிதுமின்றி அவர் குள்ள உருவத்தை எள்ளி நகையாடினார். அதனால் ஆத்திரம் கொண்ட அகத்தியர் ‘அரக்க உடலும், எருமை தலையும் கொண்ட மகிஷாசுரனாக ஆக கடவது’ என சாபமளித்தார்.
அவன் மேலும் மேலும் தீய செயல் புரிந்து, உடல் சொன்னபடி ஆடி, பிறருக்கு இடையூறு விளைவித்து வாழவே தகுதி இல்லாதவனானான். ஆனால் அவன் வலிமை மிகுந்தவனானதால் எளிதில் அவனை அழிக்க முடியவில்லை. தேவர்களாலும், முனிவர்களாலும் கூட வீழ்த்த முடியாதபடி அவன் சக்தி பெருகிற்று, ஆனால் அது தீய சக்தியாயிருந்தது. அவனை அழிக்க ரிஷிகள் தவமியற்ற, அழித்து வரமருள வந்த கருணையே வடிவானவள் மகிஷாசுரமர்தினி. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒன்பது நாட்கள் விரதமிருந்து அவனுடன் போரிட்டு பத்தாம் நாளான தசமி அன்று அவனை அழித்தனர்.  அதை கொண்டாடவே முதல் மூன்று நாள் சக்திக்கும், அடுத்த மூன்று நாள் லட்சுமிக்கும், இறுதி மூன்று நாள் சரஸ்வதிக்கும் முறையே பூஜை செய்யப்படுகிறது. ஒன்பதாவது நாள் ஆயுத பூஜை/சரஸ்வதி பூசையென கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே.
இதில் நாம் கவனிக்க வேண்டியது, நிலை உயரும்போது பணிவை மறப்பதும், ஒருவரை உருவம் கண்டு பரிகசிப்பதும், விருந்துக்காய் வந்தவரை ஓம்பாது விடுப்பதும், பெரியவர்களை மதிக்காதிருப்பதும் எருமைக்குரிய புத்தி. மனிதன் மந்தமாய் இருக்கும்போது தன்னை பிறர் எருமை என ஏச கேட்டிருப்பான். ஆக, எவ்வளவு புண்ணிய காரியம் செய்து தவ வலிமையோடு இருந்த போதும் இந்த அடிப்படை குணமில்லாத மனிதன் எருமை தான், அரக்கன் தான். நம் ஒவ்வொருவரிடமும் இத்தகைய ஏதாவதொரு தீய குணம் இருக்கவே செய்யும். சிலருக்கு வந்து வந்து போகும். சிலருக்கு கூடவே தங்கிவிடும். அத்தகைய குணங்களை ஒருவன் வளர்த்துக் கொண்டால் அவன் அசுரனன்றி மனிதனில்லை. அப்படிப்பட்டவனுளிருந்து மனிதனை மீட்டெடுக்க சிறந்த கல்வி, கேடில்லா செல்வம், நல்லதற்கு துணை நிற்கும் வீரமென மூன்றும் தேவைப்படுகிறது.
தெய்வமாயிருப்பினும் தேவியும் கூட விரதமிருந்து, போராடியே வெற்றி காண்கிறாள். விரதமானது எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தூய்மையை கடைப்பிடித்து, ஒழுக்க நெறிப்படி வாழ்வதே என கொள்வோம். போரானது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாவல்கள், பிரச்சனைகளாக கொள்வோம். போராட்டம் எப்படிப்பட்டதாய் இருப்பினும் நம் இயல்பிலிருந்து பிறழாது, ஒழுக்கம் வழுவாது வாழ்பவர்களே தனக்குள்ளிருக்கும் அசுரனை வென்று இன்புறுகின்றனர். என்னைப் பொறுத்தவரை நாம் இந்த உண்மையை புரிந்து கொள்வதே நவராத்திரி கொண்டாடும் பலனென எண்ணுகிறேன்.
கொலு வைப்பதிலும் கூட ஒரு முறைமையே கொண்டுள்ளோம். 5  வரிசை, 7  வரிசை, 9  வரிசை என அவரவர் சக்திக்கேற்ப கொலு வைப்பர். முதலில், மேற்படிகளில் தெய்வங்களும், அடுத்து மனிதர்களும், இறுதியாக விலங்கினங்களும் இருக்குமாறு அடுக்குவர். ஆக மனிதன் தன் நிலையிலிருந்து மிருக நிலைக்கு தாழ்வதும், தெய்வ நிலைக்கு உயர்வதும் தன்னுடைய எண்ணம், சொல், செயல்களின் விளைவே ஆகுமென அறியப்படுகிறது.
இந்த நவராத்திரியை முன்னிட்டு வெகு நாளாய் எழுத எண்ணியிருந்த தேவி மீதான பாக்கள் எழுதி முடிக்க முடிந்தது குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி…..
நீங்காகுங் குமமும் நித்யமாங் கல்யமும்
தீங்கிலாகுமிழ் சிரிப்பும் திவ்யதிரு வுருவுமுடை
அலங்கார வல்லியே அபிராமியே – எதற்கும்
கலங்காத மனமருளு வாய் 
ஆனிப்பொன் னமுதே ஆழ்கடல் தோன்றலே
பேணியெமை காத்தரு ளுமரிய வன்துணையே
வாணியவள் மாமிநீ வேண்டு வோருக்கு
கேணிநீராய் திருபெருகருளு வாய்
**  பேணி எமை காத்தருளும் அரி அவன் துணையே என பொருள் கொள்க. 
வெண்தாமரை வீற்றிருந்து வேதந்தனை காக்கும்�
கண்தாமரை இமையாது கல்விதனை நல்கும்
பெண்குல பெருந்தவமே சீலபெட்டகமே – எண்
எழுத்தியற்ற என்றுமருளு வாய்
எல்லார் வாழ்விலும் அமைதியும் இன்பமும் பொங்கி பெருக இந்த நன்னாளில் மனமுருகி தேவியை வணங்குவோமாக…..

Comments

சொல்லப்பட்ட மூன்றும் அவரவர் உணர வேண்டும்...

தொடர வாழ்த்துக்கள்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...