காதல்.....

காதல்.....
ஒரு சொல், வெறும் ஒற்றை சொல். பிரபஞ்சத்தின் புதிர்களையும், பால்வெளியின் அதிசயங்களையும், குழந்தையின் தூக்க சிரிப்பின் அர்த்தத்தையும் தன்னுள்ளே கொண்டது. பக்தனுக்கு கடவுளாகவும், பக்தியின்றி பார்ப்பவனுக்கு கல்லாகவும் தெரியும் சிலை போல உணர்ந்தவனுக்கு உலகமாகவும், உணராதவனுக்கு ஒன்றுமில்லாததாகவும் தெரியும் உன்னதம் - காதல்.

பாசம், கருணை, இரக்கம் அனைத்தும் அன்பின் வெவ்வேறு பரிணாமங்களே ஆயினும், காதல் அனைத்திலும் சிறந்தது. மற்றவை  உள்ளத்தில் பிறந்து உள்ளத்திலே முடியும். காதல் ஒன்றுக்கு மட்டுமே உள்ளத்தில் தொடங்கி உடல், பொருள், ஆவி அனைத்திலும் கலந்து அனைத்தையும் தனக்காகவே அற்பணிக்கச் செய்யும் வல்லமை உண்டு.

நான் இப்படித்தான் என நீங்கள் உருவாக்கியிருக்கும் உங்களின் பிம்பத்தை உடைத்தெறிந்து புதிதான ஓர் பிம்பத்தை நீங்களென உங்களுக்கே அறிமுகம் செய்யும் காதல். இதுவரை கண்டுகொள்ளவே இல்லாத உங்களையே இதுவரை இல்லாத அளவிற்கு நேசிக்க செய்யும் காதல்.

உங்களுக்கு பிடித்த மலரின் வாசனை நாற்றமாய் மாறி, இன்னொரு உயிரின் நறுமணம் நாசி நிரப்பி துளைக்கச் செய்யும் காதல். தன் ரத்தத்தை விட இன்னொரு உயிரின் கண்ணீர் அதிகம் வலிக்க செய்யும் காதல். பழகிய அனைத்தும் புதிதாகவும், புதிதான அனைத்தும் பல்லாண்டு பழகியதாகவும் மாற்றும் காதல். வாழ்வில் இதற்கு முன்னர் பார்த்தே இராத ஓர் உயிரை பார்த்தவுடன் வாழ்வாய் உணர வைக்கும் காதல்.

ஒரே வார்த்தையில் எளிதில் உடையும் பொருள் இதயம் என்பதை உணரச் செய்யும் காதல். ஒரே புன்னகையில் உடைந்த இதயம் உடனே ஒட்டிக்கொள்ளச் செய்யும் காதல். உண்மையான மகிழ்ச்சி என்பது விலை கொடுத்து வாங்கும் எந்த பொருளிலும் இல்லை என்பதை விளங்கச் செய்யும் காதல்.

ஒவ்வொரு நாளும் புதிதாய் விடியும், அதனினும் புதிதாய் முடியும் காதல். இன்னொரு உயிரை யாதொரு எல்லையுமின்றி நேசிக்க முடியும் என உணர்த்தும் காதல். உன்னுடையது எதுவும் உன்னுடையது அல்ல. உன்னுடையதல்லாதது எதுவும் உன்னுடையதல்லாதது அல்ல.

வார்த்தைகளின்றி உரையாட முடியும். தொடுகையும், ஸ்பரிசமும் அன்பு பரிமாறும். பார்வை காதல் பேசும்.

இவ்வல்லமை அனைத்தும் காதலுக்கு மட்டுமே உண்டு என்று கூறி விட முடியாது. தன் சகலத்தையும் ஒப்புக்கொடுத்து இன்னொரு உயிருக்காக வாழ்வது 'தாய்மைக்கும்' உரியதாகும்.

பெண்மையின் குழந்தைத்தனத்தை கண்டு போற்றும் ஆண்மையின் தாய்மை. ஆண்மையின் குறும்புத்தனத்தை கண்டு கொண்டாடும் பெண்மையின் தாய்மை. இரண்டின் சங்கமமே காதல். காலம் கடந்து வாழும் காதல்.

காதலின் முழுமை தாய்மை - காதலிக்கும், அவளை காதலிக்கும் காவலனுக்கும்.

என்றும் காதலுடன்,
உமா குமார்.

Comments

சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

அன்பு தினம் - என்றும் வேண்டும்...
தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

வாழ்த்துக்கள்...
Unknown said…
related to this post
in astrology
visit
jothida express

www.supertamilan.blogspot.in