சினமே பகை



மஞ்சுவும், கவியும் கடற்கரை மணலில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். பல நாட்களாகவே, அவர்களுக்குக் கடற்கரையில் மணல் வீடுகட்டி விளையாட வேண்டுமென்று விருப்பம் தான். ஆனால் அண்மையில் வந்த பெருந்தொற்று காரணமாக, கடற்கரைக்குச் செல்லத் தடை இருந்ததால், இரண்டாண்டு கழித்து தற்போது தான் அவர்களின் பெற்றோர்கள் அவர்களைக் கூட்டி வந்துள்ளனர். ஒரு வாரம் முன்னதாகவே திட்டமிட்டதால் இருவரும் விளையாட என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்று தங்களது அம்மாக்களிடமும் நீண்ட பட்டியல் ஒன்றைத் தந்தனர். அவர்களுக்குப் பிடித்த இளவரசிக்கு ஒரு அரண்மனையும், அந்த இளவரசி வேலை பார்க்க ஒரு அலுவலகமும் என்று இரண்டு கட்டடங்களைக் கட்ட நினைத்திருந்தனர்.


இளவரசிக்கு எதுக்கு அலுவலகம்?என்று மஞ்சுவின் அப்பா கேட்டதற்கு, யாராய் இருந்தாலும் அது இளவரசியாவே இருந்தாலும் வேலைக்குப் போகணும், அப்போ தான அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் அவங்களே வாங்கிக்க முடியும். எங்க அம்மாலாம் வேலைக்குப் போறாங்களே என்று ஒரே குரலில் பதிலளித்தனர் இருவரும். அட அதுவும் சரிதானே? 


ஒரு வழியாக அன்று மாலை குடும்பத்துடன் அனைவரும் வந்து அவரவருக்குப் பிடித்த மாதிரியாகக் கடலைக் கொண்டாடத் துவங்கினர். கடல் எல்லோருக்குமானது தானே?


சிறுமிகள் இருவரும் திட்டமிட்டபடியே அழகாய் ஆளுக்கொரு அரண்மனையைக் கட்டினர். அவற்றில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் காயவிட்டுவிட்டு, சற்றுத் தள்ளி தனித்தனியாக அலுவலகம் கட்டத் தொடங்கினர். இடத்தைச் சமப்படுத்தி அச்சு வைத்துக் கொண்டிருந்த போது, பக்கத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவன் எதிர்பாராமல் இவர்களின் அரண்மனையின் மேல் மிதித்து ஒரு பகுதியை இடித்துவிட்டான். இதைப் பார்த்த மஞ்சுவுக்கும் கவிக்கும் தாங்கவே முடியவில்லை. பார்த்துப் பார்த்துக் கைவலிக்கக்கட்டியது. கவி அழுதேவிட்டாள். மஞ்சுவோ, ஆத்திரத்தில் அவனைப் பிடித்து கத்தத் துவங்கினாள்.


கண்ணுத் தெரியாதாடா? நீங்க விளையாட்ற மாதிரி தானே நாங்களும் விளையாண்டுட்டு இருக்கோம்? இப்டிப் பண்ணிட்ட? எவ்ளோ நேரமாக் கைவலிக்கக் கட்டினோம். தெரியுமா? இதுவே நீ ஒரு வீடு கட்டி நான் உடைச்சுருந்தா சும்மா விடுவியா? உன்ன இப்ப என்ன பண்றேன் பாருஎன்று அவனை உலுக்கி எடுத்தாள். 


ஏதோ சண்டை என்று கண்டுகொண்ட பெற்றோர்கள் உடனே ஓடி வந்து என்ன நடந்தது என்று கேட்டனர். நடந்ததைக் கூறிய அந்த சிறுவன், "சாரிங்க, தெரியாம மிதிச்சுட்டேன். என்ன மன்னிச்சுடுங்க." என்றுவிட்டு சிறுமிகளையும் பார்த்து, "நீங்களும் மன்னிச்சுடுங்க. ப்ளீஸ். உண்மையாவே தெரியாமதான் பண்ணிட்டேன். வேணும்னு பண்ணல. சாரிப்பா" என்றான். சுற்றிலும் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கியதும் என்னவோ போல ஆகிவிட்டது அவன் முகம்.


"அதெல்லாம் மன்னிக்க முடியாது, எவ்ளோ ஆசை ஆசையாக் கட்டினது இப்டிப் பண்ணிட்டு சும்மா சாரி பூரின்னு சொன்னா என்ன எல்லாம் முடிஞ்சுதா? பாருங்க கவி எப்டி அழுகுறா" என்று கோபமாய்க்கத்தினாள் மஞ்சு. பார்ப்பவர்களுக்கு அவள் மஞ்சுவா சாமி வந்து ஆடும் மாரியம்மனா என்று இருந்தது.


அந்தச் சிறுவனும் செய்வதறியாது சுற்றும், முற்றும் பார்த்தான். கண்ணீர் தளும்பி நின்றது அவன் கண்ணில். சுற்றி இருந்த கூட்டத்தில் அவன் பெற்றோரைத் தேடிக்கொண்டிருந்தான். உடன் விளையாடிய பையனையும் ஆளைக் காணோம். அவன் அவர்களை அழைத்து வர ஓடிச்சென்றிருப்பான் போல. அவர்கள் வந்து இது பெரியவர்கள் வாக்குவாதம் ஆவதற்குள் நிறுத்த வேண்டும். 


மஞ்சுவின் கோபத்தைப் பார்த்த அம்மா அவளருகே அமர்ந்து, "மஞ்சு, கவி, எவ்ளோ ஆசையா இன்னிக்குக் கிளம்பி வந்தீங்க, மணல் வீடு கட்ட?" என்று வாஞ்சையாய் வினவினார்.


"ம்ம்ம்" என்று சிணுங்கினர் இருவரும். "இப்டி கோபப்பட்டுக் கத்துறதால அந்தச் சிரிப்பு, மகிழ்ச்சி எல்லாம் எங்க போச்சுன்னே தெரில பாத்தீங்களா?" என்று மீண்டும் கேட்டார். 


"பின்ன, நாங்க ஆசையாக் கட்டினதத்தான் அந்தப் பையன் இடிச்சுட்டானே?" என்று கேட்டாள். 


இப்போது கவியின் அம்மா வந்தமர்ந்து, "அவன் வேணும்னு செய்யலைலடா, தெரியாமத் தானே செஞ்சுட்டான். அதுக்குத் தான் மன்னிப்பும் கேட்டுட்டான்ல, அதுக்கு அப்புறமும் கோபத்தை விட்டுட்டுப் போகாம இப்டிக் கத்தினா என்ன பயன் சொல்லுங்க? நீ உன்னக் கோபப்படுத்தின அந்தப் பையனப் பகையா பாக்குற, ஆனா உண்மையிலேயே நம்மோட கோபம்தான் பெரிய பகை. அத விடப் பெரிய பகையே இல்லடாம்மா. இப்ப நீயே அவங்க கட்டுன வீட்டை உடைச்சுருந்து அவங்க உன்கிட்ட இப்டிக் கத்திருந்தா நீ என்ன பண்ணிருப்ப சொல்லு" என்று மெல்லப் பேசத் தொடங்கினாள்


அவரைத் தொடர்ந்து மஞ்சுவின் அம்மாவும் "இடிஞ்சதத் திருப்பிக் கட்டுங்க, அது உங்களுக்குப் பிடிக்கும் தானே? அதுக்குத் தானே வந்தீங்க? மறுபடி கட்டுங்க. இப்ப அந்த வீடு இல்லல்ல உங்க இளவரசியோட அரண்மனை இடியாம இருந்திருந்தாலும் விளையாடி முடிச்சதும் அதை எடுத்துட்டா போகப்போறீங்க. எப்டியும் அதுக்கப்றம் இடியத்தான் போகுது. நீங்க வந்தது மணல்ல வீடு கட்ட. உங்களோட மகிழ்ச்சி அதை உருவாக்குறதுலதான். அதையே மறுபடி மறுபடி கட்டுங்க. அத விட்டுட்டு உங்க அழகான முகத்துல இருந்த சிரிப்பையும், மனசுல இருந்த மகிழ்ச்சியும் மறந்துட்டு யாருக்குமே பயன்படாத கோபத்தத் தூக்கிப் பிடிக்கலாமா? சிரிச்சாத்தான பாப்பா அழகா இருப்பீங்க. இப்பப் பாரு அழுது உம்முன்னு, நல்லவா இருக்கு?" என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டார்.

 

இரு சிறுமிகளும் இல்லை என்பது போல் தலை அசைத்துக் கண்ணீரைத் துடைத்து கொண்டனர். மணலில் அமர்ந்து மீண்டும் கட்டத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து அந்தச் சிறுவனும் "நானும் உங்க கூட விளையாட வரவா?" என்று கேட்டான். ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்த முகமாய், "ம்ம்ம்" என்றனர். மூவரும் விளையாடத் தொடங்கிய சில நிமிடங்களில் அச்சிறுவனின் அம்மாவும் அங்கு வந்தார். மூவரும் ஒன்றாய் விளையாடுவதைப் பார்த்து முகமலர்ந்தார். இளவரசிக்காக இப்போது மூன்று அரண்மனைகள் உருவாகத் தொடங்கின.



நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற - 304


Comments

Prema Raghavi said…
அருமையான கருத்தை அழகான கதை மூலம் எடுத்து சொல்லியிருக்கிறீர்கள். அற்புதம்.����❤