மழைக்கு ஒதுங்கிய டீக்கடை ஒன்றில்...
வானம் நிறம் மாறியது...
நீலம் மையிட்டது....
மழை பெண் வர
இடி தாரைகள்
பறை கொட்டின...
மழையின் மடியில்
மயக்கம் கொண்டு
விழி மூடி,
வழியில் நின்றேன்....
என்னை உரசிச் சென்றது
மழைத்துளி, பல முறை.....
மனிதத் தலை, சில முறை....
ஓடி ஒளிந்தனர்
ஒதுக்குப்புறமாய்....
மழையை
தீண்டத்தகாததென
ஒதுக்கிவிட்டு....
டீக்கடை குடையில்
போர்ப்படை வீரர்....
மழையை ரசிப்பதாய் எண்ணி
துளியில் கை மட்டும் நனைத்தபடி....
கையை உதறும் போது
முத்தாய் சிதறும் மழை....
கண்டுகொள்ளாமல் போவது
கண்ணுள்ள வீணர்களின் பிழை....
கையேந்தி நின்றாள்
தமிழ் தாயின்
கடை மகள்...
தன் மகனோடு...
மூச்சு முட்ட
முழுங்கிய வயிறுடன்
மூஞ்சி சுழித்தன
முக்கால் ஜனம்....
நனைந்துவிடக் கூடாதென்றோ,
பட்டுவிடக் கூடாதென்றோ,
கை இழுத்துக் கொண்டு
காசெரிந்தன
கால் ஜனம்...
அருகில் வர அவளை
அனுமதிக்கக் கூடாதென்றே
அடுத்தவரிடம் கொடுத்தொதுங்கியது
அன்பில்லா மனம்....
ஆனமட்டும்
அலசிப்பார்த்தேன்
அங்கே ஒருவருமில்லை
மனிதராய்...
அவள் கையில் தூங்கிய
அந்தக் குழந்தையை தவிர....
மழை நின்றதென
மகிழ்ந்து சென்றது
மனித கூட்டம்.....
மனிதம் நின்றதென
நொந்து போனது
கடையின் விட்டம்....
மழையை ரசிக்கவோ
மனிதம் வளர்க்கவோ
மண்ணில் யாரும்
மறந்தும் முயற்சி செய்வதில்லை.....
மனமின்றி முடிவு செய்தேன்....
Comments