முதன் முதலாய்....


நடுநிசியில்
தூக்கம் தொலைத்தன
கண்கள்....
துக்கம் தொலைத்து
நெஞ்சம்....
அடிவயிற்றில்
அசைந்தாய் நீ
முதன் முதலாய்....

மாலை பொழுதில்
உடல் மறந்தது
உயிர்....
உணர்வு மறந்தது
உள்ளம்....
வீறிட்டு அழுதாய் நீ
முதன் முதலாய்...

நண்பகலில்
நீர் சுரந்தன
விழிகள்...
உயிர் சுரந்தன
முலைகள்...
வாழ்வின் அர்த்தம்
உணர்த்தினாய் நீ
முதன் முதலாய்....

தனிமையில்
உன் முகம்
எதிரில்....
என் மனம்
விண்ணில்....
'ங்கா' என்றாய் நீ
முதன் முதலாய்....

அந்திவேளையில்
"அம்மா" என்றாய் நீ
முதன் முதலாய்....

அந்த
அமுதத்தமிழ் அழைப்பில்
தாய்மையின்
பூரணம் புரிந்தேன் நான்
முதன் முதலாய்....

Comments